Lucknow: உத்தர பிரதேச, கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்ற ஆண்டு இறந்து, தேசத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. போதுமான பிராண வாயு சிலிண்டர்கள் இல்லாத காரணத்தினாலேயே குழந்தைகள் இறக்க நேரிட்டது என்று முதலில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் காரணத்தை மறுத்தது உத்தர பிரதேச அரசு.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கோராக்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 60-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்தச் சம்பவம் பூதாகரமான நிலையில், உத்தர பிரதேச அரசு இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது. அதில் குழந்தைகள் இறப்புக்கு பிராண வாயு இல்லாதது காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சம்பவம் நடந்த பிஆர்டி மருத்துவக் கல்லூரி தலைமை ஆசிரியர் மருத்துவர் ராஜிவ் மிஸ்ரா மீது கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஆதித்யநாத், ‘கடந்த ஆண்டு, கோராக்பூர் சம்பவம் நடந்தவுடன், டிஜி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சென்று நிலைமையைப் பார்க்குமாறு அறிவுறுத்தினேன். அது குறித்து அறிக்கை சமர்பிக்குமாறும் கூறினேன். குழந்தைகள் இறப்பு சம்பவத்துக்கு உண்மையில் என்னக் காரணம் என்று நான் கேட்டேன். பிராண வாயு காரணமாக குழந்தைகள் இறந்திருந்தால், வென்டிலேட்டர்களில் இருந்த குழந்தைகள்தான் முதலில் பலியாகியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது வேறு ஏதோ காரணம் இருப்பதாக சந்தேகப்பட்டோம். அப்போது தான், மருத்துவமனையில் இருக்கும் உள் அரசியல்தான் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் என்று அறிந்தேன்’ என்று பேசியுள்ளார்.