This Article is From Dec 26, 2019

CAA எதிர்ப்பு போராட்டத்தில் 2 முஸ்லிம்கள் பலி! ஆறுதல் தெரிவிக்க மறுத்த பாஜக அமைச்சர்!!

குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின்போது காயம் அடைந்த ஓம் ராஜ் சைனி என்பவரது பிஜ்னோர் வீட்டிற்கு சென்று உத்தரப்பிரதேச அமைச்சர் கபில் தேவ் அகர்வால் அறுதல் தெரிவித்தார். இதே பகுதியில் போலீசார் நடவடிக்கையால் உயிரிழந்த 2 முஸ்லிம்களின் வீடுகளுக்கு அவர் செல்லவில்லை.

2 முஸ்லிம்களின் வீடுகளுக்கு ஏன் செல்லவில்லை என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Bijnor:

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது 2 முஸ்லிம்கள் கடந்த வெள்ளியன்று உயிரிழந்தனர். இதேபோன்று முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பிஜ்னோரில் உள்ள முஸ்லிம் அல்லாதவரான ஓம் ராஜ் சைனி என்பவரது வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் கபில் தேவ் அகர்வால் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஆனால், அதே பகுதியில்தான் உயிரிழந்த 2 முஸ்லிம்களி வீடும் உள்ளது. அங்கு செல்வதை அமைச்சர் தவிர்த்து விட்டார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

அமைச்சரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது உயிரிழந்த முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் தெரிவிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

'மத்திய அரசு ஒருங்கிணைந்த, அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறி வருகிறது. நீங்கள் பிஜ்னோரின் நேதாவூரில் உள்ள ஓம் ராஜ் சைனி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினீர்கள். அதே வீட்டிற்கு சென்று பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் அவர், போராட்டத்தின்போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 முஸ்லிம்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். ஆனால் நீங்கள் அங்கு செல்லவில்லை. இப்படியிருக்கையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கை நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்?' என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

3t8lplr

Congress leader Priyanka Gandhi met the families of those died in the violence in Bijnor.

ஆனால் தன்மீதான புகார்களை ஏற்க மறுத்த அமைச்சர், 'நான் ஏன் கலவரக்காரர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும்?. கலவரம் நடக்க வேண்டும் என விரும்புபவர்கள், வன்முறையை தூண்டி விடுபவர்கள் எப்படி சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்க முடியும்?. ஏன் அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்?. இது இந்து - முஸ்லிம் பிரச்னை அல்ல. கலவரக்காரர்கள் வீட்டிற்கு ஏன் செல்ல வேண்டும்?' என்று பதில் கேள்வி எழுப்பினார். 

வன்முறையின்போது ஓம் ராஜ் தனது வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவரை வன்முறையாளர் ஒருவர் சட்ட விரோத துப்பாக்கியால் சுட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்த வருகின்றன. இது மதத்தின் அடிப்படையில் முதன் முறையாக குடியுரிமை வழங்க வழி செய்கிறது. 

இந்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சிலருக்கு குண்டுக் காயம் ஏற்பட்டிருக்கிறது. 

கடந்த வெள்ளிக் கிழமை நடந்த போராட்டத்தின்போது பிஜ்னோரில் 20 வயதான சுலைமானும், 25 வயதான அனஸ் என்பவரும் உயிரிழந்தனர். இவர்களில் சுலைமான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். 

சுலைமான் வன்முறையாளர்கள் மத்தியில் இருந்ததாகவும், தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதனை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு 2015-க்கு முன்னர் வந்த, முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குடியுரிமையை வழங்குகிறது.

இதில் மத பாகுபாடு காட்டப்படுவதாகவும், முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி போராட்டங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. 

.