சின்னத்தம்பி யானை அதன் வாழ்விடத்திலேயே முழு கண்காணிப்புடன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
ஹைலைட்ஸ்
- கோவையில் சுற்றி வந்தது சின்னத்தம்பி யானை
- அதன் அட்டகாசம் அதிகரித்ததாக கூறி,தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதைத் தவிர வழியில்லை, அமைச்சர் சீனிவாசன்
கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி காட்டு யானை கடந்த முன்று தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், சின்னத்தம்பியை கூண்டில் அடைத்து கும்கியாக மாற்றும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தனது வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சின்னத்தம்பி யானை, கடந்த சில நாட்களாக கட்டுக் கடங்காமல் சுற்றி வருவதால், அது சோர்வடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, சின்னத்தம்பியின் உடல்நிலை இன்று சோதிக்கப்பட்டது. அது தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சின்னத்தம்பி யானை அதன் வாழ்விடத்திலேயே முழு கண்காணிப்புடன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. மேலும், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று கூறி சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், அந்த முயற்சி கைவிடப்படும் என்று அரசு வட்டாரத்திலிருந்து வரும் தகவல் கூறுகிறது.