বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 22, 2019

ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by ,
New Delhi:

ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் தர மறுத்ததை தொடர்ந்து, நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சுமார் மூன்று மணி நேரம் நடந்தது. 

இதைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ கோரியுள்ளது.

இதனிடையே, ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போது காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்மன் அளிக்கப்பட்டபோதெல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறையினரிடம் சிதம்பரம் ஆஜரானார் எனவும் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் தரப்பு வாதாடியது. வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? 24 மணி நேரமாக ப.சிதம்பரம் தூங்கவில்லை. ஆதாரங்கள் அடிப்படையில் இங்கு வழக்கு நடக்கவில்லை. வேறு எதற்காகவோ நடக்கிறது என்று தெரிவித்தார். 

இருதரப்புக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தை தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கை அரை மணி நேரம் ஒத்திவைத்தனர். தொடர்ந்து, சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா, காவலில் வைக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இன்று இரவு முதல் ப.சிதம்பரத்திடம் விசாரணை தொடங்குகிறது என சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. 
 


இந்திராணி முகர்ஜி, தனது மகளான ஷீனா போராவைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அந்த வழக்கில்தான் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் வழக்கில் அவர் அப்ரூவராக மாறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டித்தான், ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதாம். அதைத் தொடர்ந்துதான் சிதம்பரத்துக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அவருக்கு முன் ஜாமீன் கொடுக்காததை அடுத்து, நேற்று இரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

“சிதம்பரம், வெளிநாட்டு முதலீடுகள் பெற்றுத் தருவதற்கு உதவுவதாக கூறினார். அதற்கு கைமாறாக, கார்த்தி சிதம்பரத்துக்கு வியாபார நோக்கில் உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்” என்று இந்திராணி, அமலாக்கத் துறையிடம் கூறியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் NDTV-யிடம் கூறியுள்ளது.
 


இந்த நிலையில் தற்போது அவர் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், 'இந்த அரசு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் வழக்கை ஜோடித்துள்ளது. இந்த வழக்கில் உள்ள சம்பவங்கள் எல்லாம் 2008-ல் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு 9 ஆண்டுகள் கழித்து 2017-ல் வழக்குப்பதிவு செய்கின்றனர். அதுதொடர்பாக எங்களுக்கு சொந்தமான இடங்களில் 4 முறை ரெய்டு செய்தார்கள். இந்தியாவிலேயே இந்த அளவுக்கு யாரும் ரெய்டு செய்யப்பட்டது கிடையாது. 

20 தடவை எனக்கு சம்மன் அளித்துள்ளனர். அது ஒவ்வொன்றுக்கும் 10 மணி நேரம் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். சிபிஐயின் விருந்தாளியாக 11 நாட்கள் இருந்திருக்கிறேன். இதற்கு பின்னரும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லையே. 
 



எனக்கு நடந்தவற்றையெல்லாம் சட்டப்படி எதிர்கொண்டுதான் இன்று எம்.பி.யாகி உள்ளேன். அதேபோன்று இந்த விவகாரத்தையும் எதிர்கொள்வோம். இது ஒன்றும் எங்களுக்கு புதுசு இல்லை. சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம்.' என்று தெரிவித்திருந்தார். 

 

Advertisement