பெண்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எனப் பரவலாக அழைக்கப்படும் இந்தியக் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களின் சதவீதம் 25-க்கும் குறைவாக உள்ளதென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2013 முதல் 2017 வரையிலான மத்திய பணியாளர் நலத்துறை தரவுகளிலிருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளது. 2017-ல் 24.05 சதவீத பெண்கள் மட்டுமே குடிமைப்பணிக்குத் தேர்வாகியுள்ளனர். 2013-ல் 21.25 சதவீதமும், 2014-ல் 22.96 சதவீதமும், 2015-ல் 19.67 சதவீதமும், 2016-ல் 23.32 சதவீத பெண்களும் இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
குடிமைப்பணிகளில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பெண்கள் அதிக எண்ணிக்கையில் குடிமைப்பணி தேர்வை எழுத ஊக்கப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஆச்சரியம் அளிக்கும் விதமாக 2016-ல் நந்தினி, 2015-ல் டினா தாபி, 2014- இரா சிங்ஹால் ஆகிய பெண்கள் இந்தியக் குடிமைப்பணி தேர்வில் முதலிடம் பிடித்தனர்.
இந்தியக் குடிமைப்பணி தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத்தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலையில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதிலிருந்து ஆளுமைத் தேர்வு அல்லது நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளர்கள் டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.
முதன்மை மற்றும் ஆளுமை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பணிகள் இந்தியக் குடிமைப் பணியில் இடம்பெற்றுள்ளன.