பாறையில் அடிபட்டு உயிரிழந்தாரா அல்லது என்ன காரணத்தால் இந்த சம்பவம் நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Washington: அமெரிக்காவில் ஒரேகன் மாகாணத்தில் உள்ள கிராட்டர் ஏரியில் குதித்த 27 வயது இந்திய மாணவன் உயிரிழந்துள்ளார். பாறைகளுக்கு இடையே சிக்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
கிராட்டர் ஏரி தேசிய பூங்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் விசார்ட் தீவு அருகேயுள்ள க்ளிட் வுட் கோவ் பகுதியில் மட்டும் மக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த சுமேத் மன்னார் என்ற மாணவர் கடந்த ஞாயிறன்று இந்த ஏரிக்கு குளிக்கச் சென்றார். அவர் 25 அடி உயரத்திலிருந்து ஏரிக்குள் குதித்தார். அதன்பின்னர் அவர் வெளியே வரவே இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மீட்பு குழுவினருடன் வந்த போலீசார் மாணவன் சுமேத்தை தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில் திங்களன்று சுமேதின் உடல் 90 அடி ஆழத்தில் பாறைகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்டது. குதித்ததில் பாறை தாக்கி அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு என்ன காரணத்தால் இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு நடந்த இந்த ஏரியின் ஆழம் 1200 அடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.