This Article is From Aug 11, 2018

புற்றுநோய் ஏற்படுத்தியதாக வழக்கு: 290 மில்லியன் டாலர் இழப்பீடு தர உத்தரவு

மான்சாண்டோ நிறுவனம் தமது களை அழிப்பு மருந்தைப்பற்றி எச்சரிக்கை செய்யத் தவறிவிட்டதாகவும் கெடுநோக்குடன் நடந்துகொண்டதாகவும், நீதிபதிகள் ஒருமனதான முடிவு

புற்றுநோய் ஏற்படுத்தியதாக வழக்கு: 290 மில்லியன் டாலர் இழப்பீடு தர உத்தரவு
San Francisco:

கலிபோர்னியாவைச் சேர்ந்த தோட்டப் பராமரிப்பாளர் டிவெய்ன் ஜான்சன் (46). பெனிசியாவில் உள்ள பள்ளியில் பணியாற்றுகையில் மான்சாண்டோவின் களை அழிப்பு மருந்தான ரவுண்டப்பை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். 2014இல் இவருக்கு non-Hodgkin's lymphoma என்ற வெள்ளையணுக்களைப் பாதிக்கின்ற கேன்சர் நோய் ஏற்பட்டது.

 

ரவுண்டப் மருந்தில் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் கேன்சரை உண்டாக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு நிறுவனம் 2015 இல் வெளியிட்ட முடிவுகளை வைத்து இவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரசாயனப் பெருநிறுவனமான மான்சாண்டோ 290 மில்லியன் டாலர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

மான்சாண்டோ நிறுவனம் தமது களை அழிப்பு மருந்தைப்பற்றி எச்சரிக்கை செய்யத் தவறிவிட்டதாகவும் கெடுநோக்குடன் நடந்துகொண்டதாகவும் அவர்களது மருந்துகள்தான் மனுதாரருக்குப் புற்றுநோய் ஏற்படக் காரணம் என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், எட்டு வார விசாரணைக்குப் பிறகு ஒருமனதான முடிவுக்கு வந்து இத்தீர்ப்பை அளித்துள்ளனர். 

 

எனினும் தமது நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் மான்சாண்டோ இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. "40 ஆண்டுகளாக இந்த மருந்து பயன்பாட்டில் உள்ளது. பல விவசாயிகளகுக்கு பாதுகாப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. ஜான்சனுக்கு ஏற்பட்டுள்ளதற்கு வருந்துகிறோம். அதே நேரத்தில் எங்களது தயாரிப்பில் எந்தப் பாதுகாப்புக் குறைபாடும் இல்லை" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தீர்ப்பை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிவெய்ன் ஜான்சன், “எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த இத்தருணத்தில் நீதிபதிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது முன்னெடுப்பு என்னை மட்டும் சார்ந்ததல்ல. அது என்னைவிடப் பெரியது. இதற்குத் தேவையான கவனத்தை அனைவரும் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

'நியாயம் நம் பக்கம் இருந்தால் வெல்வது கடினமில்லை' என்று தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜான்சனின் வழக்கறிஞர் விஸ்னர் "இது ஆரம்பம்தான். இனி இதேபோல பல வழக்குகள் மான்சாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட இத்தீர்ப்பு கதவுகளைத் திறந்துள்ளது." என்று கூறினார். 

 

மான்சாண்டோ தமது வியாபார முறையை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுக்கு உணர்த்தியுள்ளது என்று மற்றொரு வழக்கறிஞர் கூறினார். 

 

அண்மையில்தான் 62 பில்லியன் டாலர்களுக்கு ஜெர்மனியின் பேயர் நிறுவனம் மான்சாண்டோவை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமெரிக்கப் படைகள் வியட்நாமில் பயன்படுத்திய ஏஜன்ட் ஆரஞ்ச் என்னும் தயாரிப்பும் கேன்சரை ஏற்படுத்தியதாக செய்தி வெளியானது. இராணுவம் எவ்வாறு பயன்படுத்தியது என்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று மான்சாண்டோ அப்போது இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

 

 
.