Washington: தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த இஸ்லாமாபாத் போதுமான முயற்சியை எடுக்காததால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை அமெரிக்க நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
எவ்வித பேதமும் இன்றி ஹக்கானி இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை குறிவைத்துக் கட்டுப்படுத்த பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கூட்டு நிதியுதவியை தடை செய்துள்ளது சலசலப்பை எற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் பென்டகன் செய்தித்தொடர்பாளர் கர்னல் ஃபாக்னர் கூறுகையில், ‘தற்போது வெளிவரும் செய்திகளில் எல்லாம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த உதவி குறித்தான செய்திகள் திரிந்து வருகின்றன. பாதுகாப்பு உதவியைத் தான் அமெரிக்கா நீக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது. அதுவும் கடந்த ஜனவரி மாதம் வெளியான அறிவிப்பு ஆகும்.
தற்போது வெளியாகியிருக்கும் செய்தியைப் போல இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை. நிதி உதவி ஒப்பந்தம் காலாவதி ஆகும் முன்னர் மறு செயலமைப்பு செய்வதற்கான ஓர் ஒப்புகை’ என்றார்.
மேலும் கர்னல் கூறுகையில், ‘அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. எவ்வித பாகுபாடுகளுக்கும் இடம் அளிக்காமல் ஹக்கானி இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களை குறிவைக்கவும், தலிபான் தலைவரை கைது செய்து கொண்டு வர அழுத்தம் கொடுத்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
தெற்கு ஆசிய திட்டங்களுக்கு தீர்க்கமான ஆதரவு அளிக்காமல் உள்ள பாகிஸ்தானுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதம் உள்ள 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஜூலை, 2018-ன் போது மறுசெயலமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த நிதி ஒப்பந்தம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் காலாவதி ஆகிறது என கர்னல் தெரிவித்துள்ளார்.
ஆனால், நிதி உதவி தங்களுக்கே உரியது என்றும் தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் போராடியதற்கான செலவுகளுக்கு அந்த நிதி வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.