This Article is From Feb 15, 2019

காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் : இந்தியாவுக்கு உதவ தயார் என்று அறிவிப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஹைலைட்ஸ்

  • காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
  • உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது அமெரிக்கா
  • புல்வாமா தாக்குதலில் 40 ரிசர்வ் போலீசார் உயிரிழந்தனர்
Washington:

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயார் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் காரில் 350 கிலோ வெடிகுண்டை நிரப்பிக்கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது-

ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. தாக்குதலை நடத்தியிருப்பது ஐநா சபையால் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு ஆகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின்படி தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செய்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

.