அதிபர் ட்ரம்ப், மெக்சிக்கோ நாட்டு எல்லையில் எல்லைச் சுவர் கட்ட 5 பில்லியன் டாலர்கள் கோரியிருந்தார்
ஹைலைட்ஸ்
- காங்கிரஸ் சபை, நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை
- இன்று காலையுடன் அமெரிக்க அரசு முடங்கியது
- எல்லைச் சவருக்கு ட்ரம்ப், 5 பில்லியன் டாலர் கோரியிருந்தார்
Washington: கிறிஸ்துமஸ் வரவுள்ள நிலையில், இன்று காலையுடன் அமெரிக்க அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் எல்லைச் சுவர் கோரிக்கை மற்றும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அந்நாட்டு காங்கிரஸ் சபை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் சுமூக முடிவை எட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் இரு தரப்பும் ஒத்தக் கருத்துக்கு வரவில்லை. இதனால், அரசுக்கு இன்று முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப், மெக்சிக்கோ நாட்டு எல்லையில் எல்லைச் சுவர் கட்ட 5 பில்லியன் டாலர்கள் கோரியிருந்தார். இதற்கு நாட்டின் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்கள் எதிர்ப்பினால், மற்ற விஷயங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட முடியவில்லை. அரசின் இந்த முடக்கம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து எந்த வித தெளிவும் இல்லை. ஆனால் அதிபர் ட்ரம்ப், ‘அதிக நாளைக்கு அரசு முடக்கம் தொடராது' என்று தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்ச்சியளிக்கும் முடிவால், அமெரிக்க அரசுக்குக் கீழ் வேலை செய்யும் 8 லட்சம் ஊழியர்களுக்கு, சம்பளம் கொடுக்கப்படாது என்றும் இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து முன்னர் பேசிய ட்ரம்ப், ‘அரசு, அதிக நாட்கள் முடங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி நடக்காது என்று நம்புகிறேன். அதே நேரத்தில் அதிக நாள் முடக்கத்துக்கு என் தலைமையிலான அரசாங்கம் தயாராக இருக்கிறது' என்று கூறியிருந்தார். காங்கிரஸ் சபைக்கும், அமெரிக்க அரசின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையில் திரை மறைவில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நமக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.