ஏற்கனவே ஒருமுறை ட்ரம்ப் தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார்.
New Delhi: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் விரும்புகிறது. இரு நாடுகளும் தங்களுக்குள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் எனது உதவியை இரு நாடுகளும் விரும்பும் என்று கருதுகிறேன். இரு நாடுகளும் விரும்பினால் நாங்கள் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளோம்' என்று கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசிய 24 மணி நேரத்திற்குள்ளாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இவ்வாறான கருத்தை கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தளவில் அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும், இதில் வெளிநாடுகள் தலையிட தேவையில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தளவில் இதுதான் இந்தியாவின் நிலைப்பாடாகவும் இருக்கிறது.
முன்னதாக இம்ரான் கானை சந்தித்து பேசுவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், 'இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் இரு நாட்டு பிரச்னையை தீர்த்து வைக்க நான் உதவி செய்வேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் எனக்கு நல்ல நட்புறவு உள்ளது. மத்தியஸ்தம் செய்து பிரச்னையை முடித்து வைப்பதில் நான் வல்லுனர். மத்தியஸ்தராக நான் ஒருபோதும் தோற்றது கிடையாது.' என்றார்.
தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட விருப்பம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் புல்வாமா தாக்குதல், அதற்கு இந்தியா பாலகோட்டில் அளித்த பதிலடி, அதனைத் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல் செய்யும் பாகிஸ்தான் என சமீப காலமாக இரு நாட்டின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.