அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்து அதிக செய்திகள் வருகின்றன: பிரதமர் மோடி
தமிழ்மொழியின் தொன்மை குறித்து அமெரிக்காவில் நான் பேசியதை தொடர்ந்து, அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்து அதிக செய்திகள் வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா இன்று கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்திறங்கினார்.
விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல், பாஜக சார்பிலும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பலர் வரவேற்றனர்.
இதன்பின் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்துள்ளதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்பொழுது, தமிழ்மொழியின் தொன்மை குறித்து அமெரிக்காவில் மற்றும் ஐ.நா. பொது சபையில் பேசினேன்.
இதனால், தமிழ் மொழி குறித்து தான் தற்போது அமெரிக்க ஊடகங்கள் அதிக அளவில் செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் நலமுடன் உள்ளனர். இந்தியாவை பற்றிய பெரும் எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களுக்கு உள்ளது.
பிளாஸ்டிக்கையே பயன்படுத்த வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்றே கூறினேன். சுற்றுச்சுழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்,