பாகிஸ்தானில் புகுந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை போல இந்தியாவாலும் செய்ய முடியும்.
New Delhi: இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்களுக்கிடையே பதட்டமான சூழல் நீடித்து வரும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் பாலகோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் இருந்து கொண்டுதான் இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியும், செயல்படுத்தியும் வந்தனர்.
இந்நிலையில், பாலகோட் பகுதிகளில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ''மிராஜ்-2000'' ரகத்தை சேர்ந்த 12 போர் விமானங்கள், சுமார் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி நடத்திய அதிரடி தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லேசர் ரக குண்டுகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 200 முதல் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து இன்று இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் தொடர்ந்துள்ளது. இன்று காலை எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானிகளை கைது செய்து சென்றுள்ளதாகவும் பாகிஸ்தான தெரிவித்தது.
இந்நிலையில், பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயார் என்றும், பின்லேடனை பிடிக்க பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததுபோன்று இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் நுழைய தயார் என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ‘பிரச்னையை பேசித் தீர்ப்போம்!'- இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் இம்ரான் கான்