ஒசாமா கொல்லப்பட்ட பிறகு அவரது 3 மனைவிகளும், குழந்தைகளும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஹைலைட்ஸ்
- ஹம்சா தனது தாயுடன் ஈரானில் கொஞ்ச காலத்தை கழித்தார்
- அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,சிரியா பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது
- ஹம்சாவை கண்டறிய 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது
Washington: அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனை கண்டறிய 1 மில்லியன் டாலரை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது அமெரிக்கா. ஜிகாத்தின் இளவரசன் என வர்ணிக்கப்படும் ஹம்சா பின் லேடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹம்சா பின்லேடன் அல்கொய்தாவின் தலைவராக வளர்ந்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்காக ஹம்சா பின்லேடன் எங்கு இருந்தாலும் அவரை கண்டறிந்து தகவல் சொல்பவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை என்று அறிவித்துள்ளது.
ஹம்சா பின்லேடன் தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்று தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்காக பாகிஸ்தானில் அவர் மறைந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு இவர் ஒரு ஆடியோவை வெளியிட்டு அதில் அனைத்து தீவிரவாதிகளும் சிரியாவில் ஒன்று கூடுவோம் என்ற அறைகூவலை விடுத்தார். தன் தந்தையை பின்பற்றும் ஹம்சா பின்லேடன் ஐஎஸ் ஐஎஸ்-ஐ வலிமைப்படுத்தும் முனைப்பில் உள்ளார்.
ஒசாமா கொல்லப்பட்ட பிறகு அவரது 3 மனைவிகளும், குழந்தைகளும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ஹம்சா தனது தாயுடன் ஈரானில் கொஞ்ச காலத்தை கழித்தார். பின்னர் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாக சொல்லப்படுகிறது.
ஹம்சா பின்லேடன் முகமது அட்டாவின் மகளை திருமணம் செய்து கொண்டார் என்றும், முகமது அட்டா செப்டம்பர் 11, 2001 தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.