This Article is From Dec 19, 2019

‘குடியுரிமை சட்ட விவகாரம் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டுள்ளது’-அமெரிக்கா கருத்து

இந்தியாவில் நடக்கும் பிரச்னைகள் மட்டுமல்லாமல் உலகில் எங்கு பிரச்னை நடந்தாலும், அதுகுறித்து தங்களது நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Washington:

குடியுமை சட்ட விவகாரம் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய ஜனநாயகத்தை தாங்கள் மதிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள், அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் குறித்தும், இரு நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அமெரிக்க வெளியுறவத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவில் குடியுரிமை சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

சிறுபான்மையின மக்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதில் நாங்கள் எப்போதும் கவனம் கொள்கிறோம். அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். குடிமை சட்டம் தொடர்பாக இந்தியாவில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்துள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அது தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்.

இவ்வாறு பாம்பியோ பதில் அளித்தார்.

.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் அளித்துள்ள பதிலில், ‘குடியுரிமை சட்டம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காகத்தான் இந்த சட்டம் என்பதை உணர்வீர்கள். அண்டை நாடுகளில் சிறுபான்மையினருக்கு நேரும் பிரச்னைகளைப் பார்த்தால் எதற்காக இந்த சட்டத்தை இந்திய அரசு ஏற்படுத்தியது என்பதை புரிந்து கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், மனித உரிமைகள், மத சுதந்திரம் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

.