அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு வந்தார்.
Washington: இந்தியா மிகச்சிறந்த ஜனநாயக நாடு என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. நட்பு நாடாக இருந்த இந்தியா தற்போது பாதுகாப்பு, தூதரக உறவு என மிக முக்கிய கூட்டாளியாக உள்ளதென்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் நெருங்கிய உறவு உள்ளது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்கா இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ விடுத்துள்ள அறிக்கையில்,
‘எனது சமீபத்திய இந்திய பயணம் மிகுந்த ஆக்கப்பூர்வமாக இருந்தது. அமெரிக்காவைப் போன்று இந்தியா மிகச்சிறந்த ஜனநாயக நாடு. சர்வதேச அளவில் சக்தி மிக்க நாடுகளாக அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன. சுதந்திரத்தை கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் போம்பியோ இந்தியாவுக்கு வந்தார். அப்போது, பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வர்த்தகம், எரிசக்தி துறை, பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவைகளில் அமெரிக்கா தனது இலக்கை அடைவதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் மோடி போம்பியோவிடம் உறுதி அளித்துள்ளார்.