அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வோம் என்கிறது ஈரான்.
Washington: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச அளவில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எண்ணெய் யுத்தம் உச்ச நிலையை அடைந்து வருகிறது. கச்சா எண்ணெயை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்தின் மூலம் தீவிரவாத செயல்களுக்கு ஈரான் நிதி அளித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், அந்நாட்டை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவதற்காக மற்ற நாடுகள் எதுவும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரானிடம் இருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்படும் என்ற சூழல் இருந்தது. இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு சீனா, இந்தியா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அனுமதி அளிப்பதாக கூறியுள்ளார்.