அமெரிக்க தரப்பு, இந்த தாக்குதல்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கும் என்பது குறித்து தகவல் இல்லை.
ஹைலைட்ஸ்
- இதுவரை எல்லாம் நலமே: அதிபர் ட்ரம்ப்
- ஈராக்கிலிருந்த இரு ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது
- இரு தளங்களிலும் அமெரிக்க ராணுவத் தரப்பினர் இருந்தனர்
Washington: ஈரான், புதன்கிழமையன்று ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க மற்றும் ஈரான் அரசுகள் உறுதிபடுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. சுமார் 12 ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அனைத்தும் நலமாகவே இருக்கிறது,” என்று ட்வீட்டியுள்ளார்.
அவர் மேலும், “ஆல் இஸ் வெல்! ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எல்லாம் நலமே! நம்மிடம்தான் இருப்பதிலேயே மிகச் சிறந்த ராணுவமும் ஆயுதங்களும் இருக்கின்றன. இது குறித்து நான் சீக்கிரமே அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடுவேன்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஈரான் அரசு தரப்பு இத்தாகுதல் பற்றி, “எங்கள் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. மேலும் இறப்புகளைத் தடுக்க அமெரிக்க தரப்பு இப்பகுதியிலிருந்து தங்களது துருப்புகளை பின்வாங்கச் செய்ய வேண்டும்,” என்று தனது அதிகாரபூர்வ டிவி சேனல் மூலம் கூறியுள்ளது.
“அல்-அசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் இருந்த ராணுவத் தளங்கள் மீதுதான் ஈரான் குறிவைத்துள்ளது. இந்த இடத்தில் ஈரான் தரப்பு தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்த்து நாங்கள் உஷார் நிலையில்தான் இருந்தோம்,” என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் ஹாஃப்மேன் கூறியுள்ளார்.
தற்போது நடந்துள்ள தாக்குதல் பற்றி அதிபர் ட்ரம்புக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகளை தரப்பு கூறுகிறது. ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் வெள்ளை மாளிகளைக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க தரப்பு, இந்த தாக்குதல்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கும் என்பது குறித்து தகவல் இல்லை.
ஈரான் தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாள் முன்னர், மார்க் எஸ்பர், செய்தியாளர்கள் சந்திப்பில், “ஈரான் தரப்பு, எதாவது ஒரு வகையில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. அவர்களின் தோழமைப் படைகள் அல்லது அவர்களே இந்த தாக்குதலில் ஈடுபடலாம். எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். எதற்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம்,” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து, ஆசிய சந்தை மதிப்புகள் மளமளவென சரியத் தொடங்கின. அமெரிக்க கச்சா என்னை விலையும் 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவினால், அது கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்திவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம், தங்கள் தரப்பு விமானங்களை ஈராக், ஈரான், மத்திய கிழக்கு நாடுகள் வான்வழி வழியே செல்வதற்குத் தடை விதிக்கும் என்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸும், ஈரான் வான்வழிப் பகுதியாக செல்லும் தங்கள் விமானங்களை மாற்றுப் பாதையில் வழி மாற்றியுள்ளன.