கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா தெரபியை அங்கீகரிக்கும் அமெரிக்கா! (Representational)
Washington: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 176,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா தெரபிக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை நோயை விரைவாக எதிர்த்துப்போராட உதவுகிறது. மேலும் மக்களை கடுமையாக பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
இது தொடர்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்மா முறை கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சாத்தியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த சிகிச்சை ஏற்கனவே அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் செயல்திறனின் அளவு இன்னும் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிலர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நியூயார்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் லென் ஹொரோவிட்ஸ் கூறுகையில், "மருத்துவ பரிசோதனைகளில் இது இன்னும் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் - ஆனால் இது இன்னும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு சிகிச்சையாக இல்லை.
ஒரு நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன், உடல் தொற்றுநோயை நடுநிலையாக்க முயற்சிக்கும்போது, பிளாஸ்மா தெரபி முறை மிகவும் சிறப்பாக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.