கொரோனா அச்சுறுத்தல்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார் டிரம்ப்!
ஹைலைட்ஸ்
- அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு
- நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 பில்லியன் டாலர்கள் விடுவிப்பு
- இந்த குறுகிய கால தியாகங்கள் நீண்ட கால ஆதாயத்தை தரும்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 பில்லியன் டாலர் நிதியை அவர் அவர் விடுவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் வரும் வாரங்களில் நாம் அனைவரும் மாற்றங்கள் மற்றும் தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்றார்.
இந்த குறுகிய கால தியாகங்கள் நீண்ட கால ஆதாயத்தைத் தரும் எனத் தெரிவித்தார். அடுத்த 8 வாரங்கள் மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.
அனைத்து பகுதிகளில் உள்ள அமெரிக்கர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசரக்கால தயாரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இந்த நாட்டின் ஒவ்வொரு மருத்துவமனையையும் நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது.