This Article is From Nov 27, 2018

இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்: 26/11 குறித்து ட்ரம்ப்!

மும்பையில் 26/11 தீவிரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளன

இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்: 26/11 குறித்து ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியாவுக்கு அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பக்க பலமாக இருக்கும்’ என்று உறுதியளித்துள்ளார். 

New Delhi:

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியாவுக்கு அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பக்க பலமாக இருக்கும்' என்று உறுதியளித்துள்ளார். 

இது குறித்து ட்ரம்ப், தனது ட்விட்டர் மூலம், ‘மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய மக்களின் நீதிக்கான பயணத்தில் அமெரிக்கா என்றும் துணை நிற்கும். அந்தத் தீவிரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். நாம் எப்போதும் தீவிரவாதிகளை ஜெயிக்க விட மாட்டோம்' என்று பதிவிட்டுள்ளார். 

நேற்று மும்பை தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், 10 ஆண்டுகள் கழித்தும் தண்டிக்கப்படாதது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையாக இருக்கும். 

லஷ்கர்-இ-தய்பா அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக பாகிஸ்தானுக்கு இச்சமயத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், அமெரிக்காவின் ஆர்.எஃப்.ஜே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கும் 5 மில்லியன் டாலர் வரை சன்மானம் வழங்கப்படும்' என்று கூறியுள்ளது.

அமெரிக்க தரப்பு இதற்கு முன்னரும் இதைப் போன்ற இரண்டு சன்மானங்களை அறிவித்திருந்தது. லஷ்கர்-இ-தய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத் தலைக்கு அமெரிக்கா முன்னர் 10 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது. 

.