This Article is From Feb 25, 2020

''மீண்டும் அமெரிக்க அதிபரானால் பொருளாதாரம் பன்மடங்கு உயரும்'' - டிரம்ப் பேச்சு!!

கொரோனா வைரஸால் ஏற்பட்ட விளைவுகள், சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் என அச்சம் கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் விவகாரம் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

''மீண்டும் அமெரிக்க அதிபரானால் பொருளாதாரம் பன்மடங்கு உயரும்'' - டிரம்ப் பேச்சு!!

2 நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வந்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • இந்திய தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் டிரம்ப்
  • கொரோனா வைரஸ் சர்வதேச வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல் என்கிறார் டிரம்ப்
  • இன்றிரவு விருந்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அமெரிக்கா திரும்புகிறார்.
New Delhi:

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் பொருளாதாரம் பன்மடங்கு உயரும் என்றும், பங்குச் சந்தை எண்கள் ஆயிரமாயிரம் மடங்குகள் உயரும் எனவும் கூறியுள்ளார்.

தனது இந்திய சுற்றுப் பயணத்தின் 2-வது நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். 

டிரம்புடனான இந்த சந்திப்பில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மகேந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மகேந்திரா, டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திர சேகரன், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்திய தொழில் அதிபர்கள் மத்தியில் டிரம்ப் பேசியதாவது-

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் பங்குச் சந்தை புள்ளிகள் ஆயிரமாயிரம் மடங்குகள் உயரும். நான் வெற்றி பெறாவிட்டால் இதுவரை காணாத அளவுக்கு பங்குச் சந்தை சரிவை சந்திக்கும். 

கொரோனா வைரஸ் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்குமோ என அச்சம் கொள்கிறோம். இதனை எதிர்கொள்வதற்கு சீனா கடுமையாக பாடுபடுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நான் சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் பேசினேன். மிகவும் கஷ்டமான சூழலை அவர்கள் சீனர்கள் எதிர்கொண்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக நம்புகிறேன்.

அமெரிக்காவில் வர்த்தகம், முதலீடு செய்திருக்கும் தொழில் அதிபர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். 

இவ்வாறு டிரம்ப் பேசினார். இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்றிரவு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இரவு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். 

.