Donald Trump - சீனா, தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து சொல்லும் எண்ணிக்கையை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.
ஹைலைட்ஸ்
- சீனா மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார் டிரம்ப்
- WHO அமைப்பு சீனா பக்கம் சாய்ந்துள்ளது: டிரம்ப் குற்றச்சாட்டு
- WHO அளித்து வரும் நிதியை நிறுத்த முடிவெடுக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
Washington: உலக சுகாதார நிறுவனமான WHO, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீன அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும், இதனால் அதற்கு அமெரிக்க அரசு அளித்து வரும் நிதியை நிறுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “உலக சுகாதார நிறுவனத்திற்கு நாங்கள் அளித்து வரும் நிதியை நிறுத்துவதற்கு ஸ்திரமான முடிவு எடுக்கப்படும். உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வதாக தெரிகிறது. அது சரி கிடையாது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் பல தவறான பரிந்துரைகளை செய்துள்ளது,” என்று கூறினார். பின்னர் அவரே, “உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றுதான் சொன்னேன். உடனடியாக நிறுத்தப்படும் என்று நான் தெரிவிக்கவில்லையே,” என்றும் தெரிவித்தார். தற்சமயம் உலகளவில், அமெரிக்காதான் உலக சுகாதார நிறுவனத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கி வருகிறது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா, சரிவர நடந்து கொள்ளவில்லை என்று அமெரிக்கா தொடர்ந்து குறை சொல்லி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சீனா மீது பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
குறிப்பாக சீனா, தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து சொல்லும் எண்ணிக்கையை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.
அதே நேரத்தில் அதிபர் டிரம்பும், கொரோனா வைரஸ் விவகாரத்தில் முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. அமெரிக்காவில் முதலில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது அதை, ‘சாதாரண காய்ச்சல்' என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர்தான், நாடு தழுவிய சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்தார் டிரம்ப்.
இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்து, 12,000 பேர் மரணமடைந்துள்ளார்கள்.