This Article is From Feb 11, 2020

பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- முழு விவரம் உள்ளே!

கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.

பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- முழு விவரம் உள்ளே!

இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த பாராக் ஒபாமா, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • 'இந்தப் பயணத்தினால் இரு நாடுகள் உறவு மேலும் வலுவடையும்'
  • ட்ரம்பின் மனைவி மெலனியாவும் இந்தப் பயணத்தின் போது உடனிருப்பார்
  • செப்டம்பரில் பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றிருந்தார்
Washington D.C.:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரும் பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, புது டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு அவர் செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தின் போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகைத் தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த அரசு முறை சுற்றுப் பயணத்தின்போது, அதிபர் ட்ரம்பின் மனைவி, மெலனியா ட்ரம்பும் உடனிருப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டஃபனி கிரிஷம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், “இந்தப் பயணம் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் போன் மூலம் உரையாடினார்கள். இந்திய - அமெரிக்க மக்களிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த அவர்கள் உறுதிபூண்டனர்” எனத் தெரிவித்தார்.

“அதிபர் டர்ம்பும் அவரது மனைவி மெலனியாவும் புது டெல்லிக்குப் பயணம் செய்வார்கள். பின்னர் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்திற்குச் செல்வார்கள். அந்த இடம்தான் மகாத்மா காந்தியின் வாழ்க்கை, தலைமை மற்றும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முக்கியப் பங்காற்றியது,” என்று வெள்ளை மாளிகைத் தரப்புக் கூறியுள்ளது. 

இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த பாராக் ஒபாமா, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். ஐநா சபையின் 74வது பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக மோடி சென்றபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். 

அப்போது, அமெரிக்காவில் ‘ஹவுடி மோடி' என்கிற நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சிக்கு 50,000 இந்தியர்கள் வருகை தந்திருந்தனர்.

அதற்கு முன்னர் பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டின் போது இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். 

முன்னதாக அதிபர் ட்ரம்புடன் செய்தியாளர்களை சந்தித்தப் பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசினார். அவர், “காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இரு நாடுகள் மட்டும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

அதிபர் ட்ரம்ப், இந்த ஆண்டு மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இதற்கு முன்னர் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தார் ட்ரம்ப். 

.