This Article is From Aug 08, 2019

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை: அமெரிக்கா

காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவாக இருக்கும்

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை: அமெரிக்கா

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை: அமெரிக்கா

New Delhi:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 

பத்திரிகை செய்திகளுக்கு மாறாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு இந்திய அரசு, அமெரிக்காவுடன் கலந்தாலோசிக்கவும் இல்லை, எந்த தகவலும் தெரிவிக்கவும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் செயலகம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டரில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் கையெழுத்திட்டுள்ளார்.

தி பிரிண்ட் செய்தி வலைத்தளம் திங்களன்று வெளியிட்ட செய்தியில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றிவரும் நிலையில், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து, அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

.