Tokyo: வடகொரியா, முழுமையான அணு ஆயுத அழிப்புகளை மேற்கொண்ட பின்னர் தான் அந்நாடு மீதான தடைகள் விலக்கப்படும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
'அமெரிக்கா, ஒரு கேங்க்ஸ்டர் போல் செயல்படுகிறது' என்ற வடகொரியாவின் குற்றச்சாட்டு விமர்சனத்தை சற்றும் பொருட்படுத்தாமல், 'வடகொரியா அணு ஆயுத அழிப்பை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் தான் அந்நாட்டின் மீதான தடைகள் முற்றிலுமாக விலக்கப்படும்' என எளிமையாகத் தெரிவித்துவிட்டார், அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ.
வடகொரியாவின் பயோங்க்யாங் நகரில் கடந்த இரண்டு நாள்களாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இன்று டோக்யோவில் அமெரிக்காவில் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, “பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தெரிகிறது. மேலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையில் அடிப்படையிலேயே தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கோரிக்கைகள் தரும் அழுத்தம் முழுமையான அணு ஆயுத அழிப்புக்கு வழிவிட்டது போக, அமெரிக்கா- வடகொரியா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பங்கம் விளைவிப்பதாகவே உள்ளதென வடகொரியா தரப்பில் பேசப்படுகிறது.
ஆனால், பயோங்க்யாங் நகரில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் மத்திய ஏதோ ஒரு வெறுமை ஏற்பட்டுள்ளதாகவே உணரப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் ஒரு கருத்து நிலவி வருகிறது.
டோக்யோ நகரில், பாம்பியோ, ஜப்பான் மற்றும் தென் கொரியா உடனான தனது பேச்சுவார்த்தை குறித்தும் விளக்கியவர் வடகொரியா உடனான தனது உரையாடல்களும் தொடரும் என விளக்கமளித்தார்.
அமெரிக்க செயலாளர் பாம்பியோ, தற்போது ப்யோங்க்யாங் நகருக்கு பயணம் மேற்கொண்டதற்கான முக்கியக் காரணமே அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இருவருக்கும் இடையே கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் அணு ஆயுத ஒழிப்பை முற்றிலுமாக மேற்கொள்வது குறித்தும் வடகொரியா கொடுத்த வாக்குறிதியை நினைவுப்படுத்தி அதை உறுதிப்படுத்தத் தான்.
வடகொரியாவைப் பொறுத்த வரையில் அணு ஆயுத ஒழிப்பு என்ற வாக்குறுதி எளிதாக அளிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த கொரிய தீபகற்பத்திலும் அணு ஆயுதமே இல்லாமல் இருக்கச் செய்வதற்கான வழிவகைகள் மிகவும் பெரிய நடைமுறையாக உள்ளது.
டோக்கியோவில், பாம்பியோ பேசுகையில் கூட, வடகொரியாவை அணு ஆயுத ஒழிப்பை முற்றிலுமாக செயல்படுத்துவதற்காக தான் தரும் அழுத்தம் கூட சர்வதேச நாடுகள் கூட்டமைப்பின் உறுதுணையால் தான் எனத் தெரிவித்துள்ளார்.
'வடகொரியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் செயல்பாடுகள் ஒரு கேங்க்ஸ்டர் போல் தெரிவதாக அறிகிறேன். இந்த உலகமே ஒரு கேங்க்ஸ்டர் தான். காரணம், செயல்படுத்த வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஐநா பாதுகாப்பு கூட்டமைப்பில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் தானே', என அமெரிக்க செயலாளர் பாம்பியோ தெரிவித்துள்ளார்.