கூகுள் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வமான மறுப்போ ஏற்போ இதுவரை வெளியாகவில்லை.
Washington: சீனாவில் அறிமுகம் செய்வதற்காக என்று தணிக்கை செய்யப்பட்ட தனது தேடுபொறியை கூகுள் வடிவமைத்து வருவதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் கேட்டு, ஆறு அமெரிக்க ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் கூகுள் சுந்தர் பிச்சைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
2010இல் இதேபோன்று சீனா தணிக்கை சார்ந்த நிபந்தனைகளை வைத்தபோது, தங்களது தொழில் அறம் அதற்கு இடம் கொடுக்காது எனக் கூறி சீனாவின் நிபந்தனைகளை ஏற்க கூகுள் மறுத்துவிட்டது. மிகப்பெரும் சந்தையான சீனாவை இதனால் அது இழக்க நேரிட்டது.
இந்நிலையில், “2010இல் சீனாவின் கடுமையான தணிக்கை விதிகளை நிராகரித்த கூகுள் இப்போது ஒப்புக்கொள்வது ஏன்? இடையில் என்ன மாறிவிட்டது? கூகுள் சீனச் சந்தையினுள் நுழைய முடிவெடுத்ததில் அமெரிக்க அரசுக்கு எதுவும் தொடர்புள்ளதா? எவை எல்லாம் சீனாவுக்கான புதிய தேடுபொறியில் தணிக்கை செய்யப்படும்?” என்று ஆறு அமெரிக்க ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கூகுள் வடிவமைப்பதாகக் கூறப்படும் தேடுபொறி “மிகவும் வருத்துவதாகவும் சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு கூகுள் துணைபோவதாகவும் உள்ளது” என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனினும் தான் சீனாவுக்காக தணிக்கை செய்யப்பட்ட தேடுபொறியை வடிவமைப்பதாக வரும் செய்திகளை கூகுள் தரப்பு ஏற்கவோ மறுக்கவோ இல்லை. இந்நிலையில் சீன அரசின் நாளேடு ஒன்று, இதுதொடர்பான செய்திகளை மறுத்துள்ளது.
சீனாவில் 772 மில்லியன் நபர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உலக நாடுகளிலேயெ அதிக எண்ணிக்கையாகும்.