சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Port Moresby: சீனா அடிபணியாத வரையில் அந்நாட்டிற்கு கடுமையான வரிகளை விதிப்போம் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தகப்போர் கடுமையாக உள்ளது. இந்த பிரச்னை காரணமாக சர்வதேச அளவில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கும் இந்த வர்த்தகப் போர் முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்காக ரூ. 17 லட்சம் கோடி அளவுக்கு அமெரிக்கா வரியை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களுக்கு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி வரியை சீனா சமீபத்தில் விதித்தது.
இந்த பதில் நடவடிக்கையால் அமெரிக்கா – சீனாவுக்கு இடையே பிரச்னை மீண்டும் மூண்டது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், சீனா தனது அடவாடியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முன்பு விதித்த ரூ. 17 லட்சம் கோடியைப் போல இரு மடங்கு விதிப்போம் என எச்சரித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)