This Article is From Jun 20, 2018

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • ஜெனிவாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்குகிறது ஐ.நா மனித உரிமை கவுன்சில்
  • 47 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்
  • 'இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பின் மனநிலையே வெளியேற காரணம்', அமெரிக்கா
Washington: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஜெனிவாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா மனித உரிமை கவுனிசில் அமைப்பில், உறுப்பினர்களாக மொத்தம் 47 நாடுகள் இருக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்புக்கு எந்த நட்டையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத நிலையிலும், இதன் தீர்மானங்களுக்கு உலக நாடுகள் ஒத்துழைக்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், ‘மற்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது காட்டும் முன்முடிவு கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து’ அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க தரப்பு, ‘ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருக்கும் உறுப்பினர்களைப் பாருங்கள். வெனிசுலா, சீனா, கியூபா, காங்கோ ஆகிய நாடுகள் அடிப்படை மனித உரிமைகளைக் கூட நசுக்கும் நிலையில் இருக்கின்றன. கவுன்சில் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். அதுவே, அவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம்’ என்று காட்டமாக ஐ.நா அமைப்பை விமர்சித்துள்ளது.

மனித உரிமை கவுன்சில், கடந்த மாதம் இஸ்ரேல், காசா பகுதியில் நடத்திய தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. மொத்தம் இருந்த உறுப்பினர்களில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை மட்டும் தான் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. மற்ற நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக தெரிவித்தன. இது தான் அமெரிக்காவை மனித உரிமை அமைப்பிலிருந்து வெளியேறத் தூண்டியதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

உலக அளவில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்காவில் பலரும், இந்த திடீர் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள், ‘அமெரிக்கா, இப்படி மனித உரிமைகள் அம்ப்பிலிருந்து வெளியேறுவதில் இருந்தே, அதற்கு இந்த விஷயத்தை இனி எப்படி கையாளப் போகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உலக அளவில் இந்த முடிவு, மனித உரிமைகளை இன்னும் கீழிறங்கச் செய்யும். பல நாடுகளும் அமெரிக்காவைப் பின்பற்றி ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது’ என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஆனால், இஸ்ரேல் மற்றும் யூத அமைப்புகள் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளன. 


(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.