This Article is From Dec 21, 2018

அதிபர் ட்ரம்புடன் முரண்பாடு: அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜினாமா!

ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அந்நாட்டின் ராணுவத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் (Jim Mattis), தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

அதிபர் ட்ரம்புடன் முரண்பாடு: அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜினாமா!

மேட்டிஸ், தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகையிடம் சமர்பித்துள்ளார்

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் (Donald Trump) ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அந்நாட்டின் ராணுவத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் (Jim Mattis), தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தை அதிபர் ட்ரம்ப், விலக்கிக் கொள்வதாக அறிவித்ததே இருவருக்கும் இடையில் மோதல் வருவதற்குக் காரணம் எனப்படுகிறது. 

சிரியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை வெற்றி கொண்டதாகவும், அதனால் ராணுவத்தினரை திரும்ப அழைப்பதாகவும் நேற்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு ராணுவத் துறை அமைச்சரான மேட்டிஸ் முதல் பல முக்கியப் புள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டிஸ், தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகையிடம் சமர்பித்துள்ளார். அதில், ‘அமெரிக்காவுடன் பல விதங்களில் நட்பாக இருக்கும் நாடுகளுடன், தொடர்ந்து நட்புறவை பேண வேண்டும். அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்க வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சர்வதேச பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை மனதில் வைத்து, நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம், நாடு திரும்பும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளது, பொது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வரவழைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், அங்கு தொடர்ந்து போரிட்டு வரும் ஈரான், ரஷ்யா மற்றும் சிரிய அதிபர் பஷார் அசாத் ஆகியோருக்கு, அமெரிக்க விலகல் சாதகமாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் விலகல், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மீண்டும் பலம் பெற உதவும் என்றும் அஞ்சப்படுகிறது.

மேட்டிஸ் விலகல் குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது தலைமையிலான அரசில், கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத் துறை அமைச்சராக பணி புரிந்து வந்த ஜிம் மேட்டிஸ், வரும் பிப்ரவரி மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். அவரது பதவிக்காலத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு பன்மடங்களு உயர்த்தப்பட்டது. குறிப்பாக ராணுவத்துக்கு பல அதி நவீன பொருட்கள் வாங்கப்பட்டன. சீக்கிரமே, அடுத்த ராணுவத் துறை அமைச்சர் நியமனம் செய்யப்படுவார். ஜிம், ஆற்றிய பணிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதவிட்டார். 

 

.