Donald Trump - ட்ரம்ப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் இரண்டு.
Washington: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுபட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவரின் பதவியைப் பறிக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இது குறித்து பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. செனட் சபையிலும் ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலே, அவரது பதவியைப் பறிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இந்நிலையில் செனட் சபையில் ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது.
அதிபர் ட்ரம்புக்கு எதிராக பல்வேறு பலமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டாலும், செனட் சபையில் இருந்த அவரது குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். இதனால் செனட் சபையில் 52 - 48, 53-47 என்கிற அடிப்படையில் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்தன.
இந்தப் பதவிப் பறிப்பு தீர்மானத்திற்குத் தலைமை தாங்கிய அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜான் ராபர்ட்ஸ், “செனட் சபையில் இருக்கும் 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை,” என்று அறிவித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி அதிபர் ட்ரம்ப், “போலியான புகார்கள்” என்றும் “என்னை வீழ்த்த நடக்கும் சதி” என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
ட்ரம்ப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் இரண்டு. முதலாவது, அவர் தனது அதிகாரத்தைப் பல்வேறு வகைகளில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பது. இந்த ஆண்டு மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் ட்ரம்ப், மீண்டும் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் வீரியமாக போட்டியிட களத்தில் உள்ளனர்.
அவர்களுக்கு எதிராக செயல்பட உக்ரைன் அரசின் உதவியை ட்ரம்ப் நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு எதிராக அவர் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இரண்டாவதாக, காங்கிரஸ் சபையை மதிக்காமல் ட்ரம்ப் செயல்பட்டுள்ளார் என்பது. தற்போது இந்த இரண்டு புகார்களில் இருந்தும் செனட் சபையின் தயவால் விடுவிக்கப்பட்டுள்ளார் ட்ரம்ப்.