This Article is From Jan 13, 2020

மீண்டும் Iraq மீது ஏவுகணைத் தாக்குதல்… உச்சகட்ட கோபத்தில் அமெரிக்கா!!

Iran US Conflict: 'தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள முகாம்களில் அமெரிக்க ராணுவத்தினர் இருந்ததாகவும்...'

மீண்டும் Iraq மீது ஏவுகணைத் தாக்குதல்… உச்சகட்ட கோபத்தில் அமெரிக்கா!!

Iran US Conflict: சுலைமானியின் கொலைக்குப் பழி தீர்ப்போம் என்று ஈரான் ஆதரவுப் படைகள் சபதமெடுத்துள்ளன. 

Washington:

Iran US Conflict: ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த பனிப் போர், நிஜப் போராக மாறிவிடுமோ என்று உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில், மீண்டும் ஈராக் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க அரசு தரப்பு உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது. 

முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள்.

உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில், ஈராக் ராணுவ முகாம் மீது மீண்டும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் மைக் போம்பியோ, “ஈராக் ராணுவ முகாம் மீது மீண்டும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகுந்த கோபத்தைக் கொடுக்கிறது. ஈராக் அரசுக்கு விசுவாசமாக இல்லாத அமைப்புகள், ஈராக்கின் இறையாண்மையைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என்று கொதித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்த தாக்குதலுக்கு எந்த தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 8 ஏவுகணைகள் ஈராக் முகாம் மீது வீசப்பட்டதாகவும், இதில் 2 அதிகாரிகள் மற்றும் 2 போர் விமானிகள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இதைப் போன்று ஈராக் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அமெரிக்க அரசு, ஈரான் ஆதரவு அமைப்புகளைத் தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள முகாம்களில் அமெரிக்க ராணுவத்தினர் இருந்ததாகவும், ஈரானுடன் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பெரும்பான்மையானவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

ஈரான் - அமெரிக்கா இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வரும் நிலையில், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தினர் தங்கியிருக்கும் முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதைப் போன்ற தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்படுவது ஈராக் ராணுவத்தினர்தான். அதே நேரத்தில் கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். அதற்கு பதிலடியாகத்தான் ஈரான் ராணுவத் தளபதயான சுலைமானியைத் தீர்த்துக் கட்டியது அமெரிக்கா. 

சுலைமானியின் கொலைக்குப் பழி தீர்ப்போம் என்று ஈரான் ஆதரவுப் படைகள் சபதமெடுத்துள்ளன. 

.