Ballia, Uttar Pradesh: கடவுளாக இருக்கும் ராமரால் கூட நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங்.
ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய சிங், ‘நான் முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். கடவுகளாக இருக்கும் ராமரால் கூட பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தடுக்க முடியாது. இந்த அசுத்தம் யாரையும் விட்டு வைக்கவில்லை. மக்கள் தான், மற்றவர்களை தங்கள் குடும்பமாக சகோதரிகளாக நடத்த பழக வேண்டும். புரிதல் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த விஷயத்துக்கு முடிவு கட்ட முடியும். சட்ட சாசனம் மூலம் பலாத்காரங்களுக்கு முடக்குப் போட முடியாது’ என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
சுரேந்திர சிங், தொடர்ந்து இதைப் போன்ற கருத்துகளை சொல்லி வருபவர். முன்னர், ‘அரசு ஊழியர்களை விட விபச்சாரிகள் எவ்வளவோ மேல்’ என்று கூறினார்.
அதேபோல, ‘மொபைல் போன்களும் பெற்றோர்களும் தான் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதற்குக் காரணம்’ என்று கூறியிருந்தார்.
உனாவ் பலாத்கார வழக்கில் குற்றவாளியான பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு அவர் ஒருமுறை ஆதரவு தெரிவித்துள்ளார். ‘யாரும் 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒருவரை பலாத்காரம் செய்திருக்க முடியாது. இது செங்கருக்கு எதிராக புனையப்பட்ட வழக்கு’ என்று செங்கருக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.