This Article is From Dec 13, 2018

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: ஒரு வழியாக பேசிவிட்டார் யோகி ஆதித்யநாத்!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக அது குறித்து பேசியுள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: ஒரு வழியாக பேசிவிட்டார் யோகி ஆதித்யநாத்!

பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Patna:

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக அது குறித்து பேசியுள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அவர் 3 மாநிலங்களில் காங்கிரஸ் அடைந்த வெற்றி குறித்து கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி, மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்துள்ளது. அவர்களின் பொய்கள் விரைவில் அம்பலமாகும். அதன் மூலம், எங்களுக்கு வருங்காலத்தில் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும்' என்று பேசியுள்ளார்.

அவர் மேலும், ‘ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணம். அதை பக்குவத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் எப்போதும், எங்கள் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பிழைதான் காரணம் என்று கூறியதில்லை. ஆனால், எங்களுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் அப்படி இல்லையே' என்று தெரிவித்தார்.

அனுமான் குறித்து ஆதித்யநாத், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தேர்தலின் போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுவும் தோல்விக்கு ஒரு காரணமா என்று கேட்கப்பட்டதற்கு ஆதித்யநாத், ‘நான் அனுமான் குறித்து எந்த வித தவறான கருத்தும் தெரிவிக்கவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது' என்றார்.

ராஜஸ்தானில் தேர்தல் கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், ‘அனுமான் ஒரு தலித்' என்று கூறினார். இதற்கு பல இந்து அமைப்புகளே எதிர்ப்பு தெரிவித்தன. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இந்து அமைப்பு, ஆதித்யநாத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் 2 இடங்களால் பெரும்பான்மை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் பாஜக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது காங்கிரஸ்.

.