சத்தீஸ்கரில் இன்று 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து வருகிறது
Bhillai, Chhattisgarh: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பிரசார உரையின் போது, ‘நக்சல்களை வெட்கமே இல்லாமல் புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ் தான்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பிலாயில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், ‘சத்தீஸ்கரில் நக்சல் இயக்கம் பரவுவதற்குக் காரணம் காங்கிரஸ் தான். நக்சல் இயக்கத்தவர்களை காங்கிரஸ் தான் புரட்சியாளர்கள் போல உருவகப்படுத்தியது. நக்சல் இயக்கத்தை வளர்ப்பதும் ஊழிலில் திளைப்பதும் தான் காங்கிரஸின் கொள்கை.
எப்போதும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது தான் காங்கிரஸின் வேலை. ராமர் கோயில் கட்டுவதிலும் அவர்கள் தான் பெரும் முட்டுக்கடையாக இருக்கின்றனர். வாக்கு வங்கி அரசியலில் மட்டும் தான் காங்கிரஸ் ஈடுபாடு காட்டும். தேசிய நலனில் அவர்களுக்கு சுத்தமாக அக்கறையில்லை.
அஜித் ஜோகி தலைமையில் காங்கிரஸ் சத்தீஸ்கரில் ஆட்சி புரிந்த போது, ஊழல் அதிகமாக இருந்தது. ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் ரமண் சிங் தலைமையில் பாஜக, ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சத்தீஸ்கர் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
சுதந்திரம் கிடைத்த பிறக ஒரு பிரதமர், ‘2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது' என்று பேசுகிறார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான், சத்தீஸ்கரில் பலருக்கு வீடு கிடைத்துள்ளது' என்று பேசினார்.
சத்தீஸ்கரில் இன்று 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து வருகிறது. வரும் 20 ஆம் தேதி சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.