உ.பி.யில் இருந்து குடியேறியவர்களில் சிலர் வேலைக்குத் திரும்புவது தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்
ஹைலைட்ஸ்
- உத்தர பிரதேசத்திற்கு மட்டும் 30 லட்சம் தொழிலாளர்கள் திரும்பினர்
- என் குழந்தைகள் பசியால் இறப்பதை விட நான் கொரோனா தொற்றால் இறப்பது நல்லது.
- சிறு தொழில்களில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாக...
Lucknow: சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 லட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில், தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழுமுடக்க நடவடிக்கை காரணமாக உத்தர பிரதேசத்திற்கு மட்டும் ஏறத்தாழ 30 லட்சம் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரும்பினர்.
தற்போது லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கிழக்கு உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில், திவாகர் பிரசாத் மற்றும் குர்ஷீத் அன்சாரி இருவரும் கோரக்பூருக்கு செல்ல வந்திருக்கின்றனர்.
அன்சாரி மும்பையில் ஒரு தொழிற்சாலை தொழிலாளி, அவரது பெரிய தையல் பிரிவு இன்னும் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு வீடு திரும்பியதாகவும் கூறுகிறார்.
முழுமுடக்க நடவடிக்கை காரணமாக உத்தர பிரதேசத்திற்கு மட்டும் ஏறத்தாழ 30 லட்சம் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரும்பினர்
"உ.பி.யில் வேலைவாய்ப்பு இருந்திருந்தால், நான் மீண்டும் மும்பைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. என்னால் முடிந்த அளவு வேலையை தேடிவிட்டேன். எனவே நான் முமை்பைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். பசியை விட கொரோனா சிறந்தது. என் குழந்தைகள் பசியால் இறப்பதை விட நான் கொரோனா தொற்றால் இறப்பது நல்லது.“ என அன்சாரி தனது பயணத்திற்கு முன்னர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப வல்லுநராக பணி புரியும் பிரசாத், ஹோலிக்கு வீட்டிற்கு வந்திருந்தார். லாக்டவுன் காரணமாக மீண்டும் பணிக்கு திரும்ப இயலாமல் மாட்டிக்கொண்டார். அவரது நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, அவர் ஐந்து குழந்தைகள் மற்றும் அவரது மனைவியைக் கொண்ட தனது குடும்பத்திற்கு உதவ கொல்கத்தா திரும்புவதாகக் கூறுகிறார். “நான் இங்கேயே வாழ பயப்படுகிறேன். ஏனெனில் இங்கு எனது குடும்பத்திற்கு உணவளிப்பதற்கான போதுமான வருமானம் இல்லை.“ என பிரசாத் கூறுகிறார்.
கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள திவாகர் பிரசாத், குர்ஷீத் அன்சாரி மற்றும் பலருக்கு மாநிலத்திலேயே வேலை அளிப்பதாக மாநில அரசு உறுதியளித்த போதிலும் இவர்கள் திரும்பிச் செல்ல முயல்கின்றனர். நேற்று, உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டாத்தின் கீழ் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கையில் அரசாங்கம் பெரும்பாலானோரை இணைத்ததுடன், சிறு தொழில்களில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாகவும் கூறியிருந்தது.
பின்தங்கிய கிழக்கு உ.பி. மாவட்டமான சித்தார்த் நகரில், அதிகபட்சமாக புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைகளுக்காக புலம் பெயரத் தொடங்கியுள்ளனர். ஏசி தொழில்நுட்ப வல்லுநரான முகமது ஆபிட் மீண்டும் மும்பைக்கு திரும்புவதாக கூறியுள்ளார். ஏனெனில் அரசாங்கத் திட்டங்களும் வாக்குறுதிகளும் தங்களுக்கு வந்து சேரவில்லையென கூறுகிறார். “மும்பையில் நல்ல வருமானம் உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் என்னால் இருக்க முடியாது. திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் அவை எங்களுக்கு வந்து சேருவதில்லை. இது வேலையில்லாமல் இருப்பது போன்றது. இங்கு யாருக்கும் எந்த வேலையும் இல்லை.“ என ஆபிட் கூறுகிறார்.
கிழக்கு உத்தரப்பிரதேசத்திலும், பீகார் எல்லையிலும் உள்ள பல்லியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிறகு தனது வீட்டில் என மூன்று மாதங்களை தங்கியிருந்த ராஜேஷ் குமார் வர்மா, இப்போது அகமதாபாத்திற்கு திரும்பி வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் தனது மளிகைக்கடைக்கு செல்கிறார்.
"அரசாங்கம் ரேஷன் கொடுக்கிறது, ஆனால் வேறு செலவுகள் உள்ளன, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வேலையை தவிர வேறு எந்த வேலையும் இங்கு இல்லை. அகமதாபாத்தில் ஒரு கடையை வாடகை கட்டத்தில் நடத்தி வருகிறேன். மூன்று மாதங்களாக வாடகை பாக்கியை நான் கொடுக்கவில்லை. இங்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் என்னால் எதையும் செய்ய முடியாது.“ என வர்மா கூறுகிறார்.
தற்போது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று காலத்தில் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய தங்களின் வாழ்வாதாரங்களை நோக்கி புலம் பெயர்வது தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் என பலர் கூறுகின்றனர்.