This Article is From Mar 20, 2019

லோக்சபா தேர்தலில் போட்டியில்லை: மாயாவதி அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகின்றன.

2014 ஆம் ஆண்டு தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ், உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றியடையவில்லை

Lucknow:

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். அவர் மேலும், ‘நான் போட்டியிடுவதற்குப் பதிலாக எனது கட்சியின் வேட்பாளர்களுக்கும், எங்களது கூட்டணிக் கட்சியான சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்வதில் அதிகம் கவனம் செலுத்துவேன்' என்று கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நான் எடுக்கும் இந்த முடிவை எனது கட்சி முழுமையாக புரிந்து கொள்ளும் என்று எனக்குத் தெரியும். எங்கள் கூட்டணி நன்றாக செயல்பட்டு வருகிறது. நான் விருப்பப்பட்டால், பிறகு கூட போட்டியிட்டுக் கொள்வேன்' என்றுள்ளார்.

ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகின்றன. 

இதுவரை மாயாவதி நான்கு முறை உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் நாடாளுமன்றத்துக்கும் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக அவர் 1994 ஆம் ஆண்டு ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்றார் மாயாவதி. 

மாயாவதி போன்றே, அகிலேஷ் யாதவும், அதிக தொகுதியில் வெற்றி பெறுவதே நோக்கம் என்றும் தனிப்பட்ட முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். 

2014 ஆம் ஆண்டு தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ், உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றியடையவில்லை. ஆனால், 20 சதவிகித வாக்கு சதவிகிதத்தை அந்தக் கட்சிப் பெற்றிருந்தது. 

பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணி, சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன. அதனால், லோக்சபா தேர்தலிலும் இருவரது கூட்டணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பில் பிரியங்கா காந்தி, கிழக்கு உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது, மாயாவதி - அகிலேஷ் கூட்டணியின் வாக்கைப் பிரிக்கும் எனப்படுகிறது. 

.