கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
Roorkee: ரயில்வே போலீஸ் உதவியால் ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு துர்கியானா எக்ஸ்ப்ரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவர் சென்று கொண்டிருந்தார். ரூர்கி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. துர்கியானா ரயிலுக்கு ரூர்கியில் நிறுத்தம் கிடையாது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீசார், கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். பிரசவ வலி அதிகரித்ததும், கர்ப்பிணிக்கு ரயிலில் இருந்த பெண்கள் உதவி செய்யத் தொடங்கினர். இறுதியாக அவர் குழந்தையை பெற்றெடுத்தார். அவரை போலீசார் பத்திரமாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.