உத்தரகண்ட்: வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்து நான்கு பயணிகள் உயிர் பிழைத்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. அதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தின் தலைநகர் தேராதூனில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹால்ட்வானி என்ற பகுதியின் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த பகுதியில், இரண்டு கார்களும், ஆட்டோவும் அருகருகே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. வாகனங்களில் இருந்து பயணிகள் வெளிவரும் பரப்பரப்பு வீடியோ காட்சி மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக இருந்த வெள்ளை நிற ஹுண்டாய் சாண்ட்ரோ காரில் இருந்த பயணி, ஜன்னல் வழியே வெளியேறி தப்பிக்க முயல்கிறார். அவர் வெளியேறிய பின்பு, காரில் இருந்த மற்ற இரண்டு பயணிகளும் வெளியே வருகின்றனர். அவர்கள் வெளியேறிய அடுத்த நொடி, ராட்சத வெள்ளம் காரை இழுத்துச் சென்றது.
அடுத்து மாட்டிக்கொண்ட சிவப்பு நிற ஹுண்டாய் ஐ10 காரில் இருந்த பயணி, ஜன்னல் வழியே வெளியேறுகிறார். பின்பு, சிவப்பு காரும் வெள்ளதில் அடித்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.