கிரிக்கெட் பேட்டால் சிறுவனை சீனியர் மாணவர்கள் அடித்துக் கொன்றுள்ளதாக போலீஸ் அதிகாரி நிவேதிதா குக்ரேதி தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- 12 வயது சிறுவன் பேட்டால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்
- பெற்றோருக்கு நீண்ட நேரத்திற்கு பின்புதான் சம்பவம் குறித்து தெரியவந்தது
- நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது
Dehradun: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக அவனது சடலத்தை எரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி அதிகாரிகளும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் சடலம் பள்ளி வளாகத்திற்குள்தான் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சிறுவனது பெற்றோர் ஹாப்பூர் என்ற இடத்தில் உள்ளனர். இது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கடந்த 10-ம்தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பள்ளியில் அந்த சிறுவன் சில பிஸ்கட்டுகளை திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவனை தண்டித்துள்ள பள்ளி நிர்வாகம் அவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, சீனியர் மாணவர்கள் சிலர் சிறுவனுக்கு தொல்லை அளித்துள்ளனர்.
கிரிக்கெட் பேட்டால் அப்போது சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயம் அடைந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தெரிவிப்பதை விட்டு விட்டு சிறுவனின் சடலத்தை பள்ளி வளாகத்திற்குள்ளேயே எரித்துள்ளனர்'' என்று கூறினர்.
சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம்தான் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அதில் காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளி மேலாளர், வார்டன், உடற்கல்வி ஆசிரியர், 2 சீனியர் மாணவர்கள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.