This Article is From Aug 08, 2019

“இனத்தை அழித்த பாவி காங்கிரஸ்… உங்களுக்கு மன்னிப்பு கிடையாது!”- வைகோ கடும் தாக்கு

“இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ். அவர்களுக்கு எப்போதும் மன்னிப்பே கிடையாது”

Advertisement
தமிழ்நாடு Written by

காஷ்மீர் பிரச்னை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் அவையிலேயே இல்லை. அவர்கள் எங்கே போனார்கள். எவ்வளவு காசு வாங்கினார்கள்.- வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் வைகோ. 

வைகோ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அழகிரி, காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார். அது தவறு. என்னை தேர்வு செய்து அனுப்பியது திமுக எம்.எல்.ஏ-க்கள்தான். காங்கிரஸின் தயவு எனக்கு இன்றும் என்றும் தேவையில்லை” என்று சீறினார்.

அதைத் தொடர்ந்து ஒரு நிருபர், “அமித்ஷா சொல்லித்தான் ராஜ்யசபாவில் காங்கிரஸுக்கு எதிராக பேசினீர்கள் என்று சொல்கிறார்களே…” என்று கொளுத்திப் போட்டார், “இதுவெல்லாம் அற்பபுத்தி உடையவர்கள் பேசும் பேச்சு. பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது, காஷ்மீர் நடவடிக்கைக்கு எதிராக ஓட்டு போடுவேன் என்று சொன்னேன். நியூட்ரிடோ திட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என்றேன். ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல் செய்யப்பட்டால், தமிழகம் எத்தியோப்பாவாக மாறும் என்று சொன்னேன். நேரடியாக மோடியிடம் சொன்னேன். இதை அவரிடம் நேருக்கு நேர் சொல்லும் தைரியம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. காஷ்மீர் பிரச்னை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் அவையிலேயே இல்லை. அவர்கள் எங்கே போனார்கள். எவ்வளவு காசு வாங்கினார்கள்.

அரசியலில் பெரியாரும் ராஜாஜியும் கடைசிவரை நண்பர்களாகத்தான் இருந்தனர். அதைப் போலத்தான் அரசியலில் நேரெதிர் கொள்கை உடையோரிடமும் நட்பு பாராடுக்கிறேன். மன்மோகன் சிங்கை நேரில் பார்த்தபோதும், ஒரு நண்பராக உங்களைப் பாராட்டுகிறேன். பிரமராகக் கண்டிக்கிறேன் என்றேன்” என பதில் அளித்தார். 

Advertisement

முடிவாக அவர், “இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ். அவர்களுக்கு எப்போதும் மன்னிப்பே கிடையாது” என்று கொதித்தார். 

முன்னதாக கே.எஸ்.அழகிரி, “அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. காங்கிரஸின் கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸையே வைகோ விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்து மாநிலங்களவையில் வைகோ பேசியதைக் கண்டிக்கிறேன்” என்று கூறினார். இதற்குத்தான் வைகோ எதிர்வினையாற்றியுள்ளார்.

Advertisement
Advertisement