இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்கவும் நான் தீர்க்கமாக பேசுவேன்”- வைகோ
Chennai: மதிமுக பொதுச் செயலாளர் மீது, 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கில், கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், தனது உத்தரவில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக வைகோ, தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா, ஒரே நாடாக இருக்காது” என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்நதது திமுக-வினர்தான். அப்போது மதிமுக - திமுக எதிரெதிர் முகாமில் இருந்தன. ஆனால் தற்போது மதிமுக சார்பில் வைகோ, திமுக-வின் ஆதரவுடன் ராஜ்யசபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக, தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு வந்தததைத் தொடர்ந்து, வைகோ ராஜ்யசபா எம்.பி சீட்டிற்குப் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கும் எனப்பபட்டது. ஆனால், கடைசியில் தேர்தல் ஆணையம், அவருக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், பல ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற படிக்கட்டுகளில் ஏற உள்ளார் வைகோ.
‘எம்.பி-யானவுடன் எந்த விஷயத்தில் முதலில் கையிலெடுப்பீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு வைகோ, “மாநிலங்களவை நான் ஒரு தனி உறுப்பினர். எனக்கு அவ்வளவு நேரம் கொடுக்கப்படாது. இருந்தாலும், என்னால் இயன்ற வரை நேரம் கேட்ட பேசப் பார்ப்பேன். இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்கவும் நான் தீர்க்கமாக பேசுவேன்” என்று கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)