This Article is From Nov 29, 2018

‘மேகதாதுவுக்கு கேடு செய்ததே பாஜக-தானே!’- ஸ்டாலின் முன்னிலையில் கொதித்த வைகோ

மேகதாதுவுக்கு கேடு பண்ணதே பாஜக-தான். அப்புறம் எப்படி அவர்களையே அழைப்பது

‘மேகதாதுவுக்கு கேடு செய்ததே பாஜக-தானே!’- ஸ்டாலின் முன்னிலையில் கொதித்த வைகோ

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு, அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அணை கட்டும் திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது குறித்து விவாதிக்க தமிழக எதிர்கட்சியான திமுக, இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று காலை 10:30 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் சற்று முன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘உடனடியாக தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டி, மேகதாது விவகாரத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அது குறித்து மாநில அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, டிசம்பர் 4 ஆம் தேதி, திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்களை கூட்டி கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்த உள்ளோம்.

நியாயமாக, இந்தக் கூட்டம் டெல்டா பகுதியில் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டெல்டா பகுதியில் தற்போது நிலைமை சரியில்லாததால், திருச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு, யார் வேண்டுமானாலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கலாம்' என்றார்.

இதையடுத்து நிருபர் ஒருவர், ‘அமமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கும் டிசம்பர் 4 கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், ‘தற்போது இந்த பேட்டியின் மூலமே அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்' என்று தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘மேகதாதுவுக்கு கேடு பண்ணதே பாஜக-தான். அப்புறம் எப்படி அவர்களையே அழைப்பது!' என்று கொதித்தார்.

.