DMK Protest - "இன்றைக்குத் தமிழகத்தில் நடந்த போராட்டம் மத்திய சர்க்காரை குலை நடுங்க வைத்திருக்கும்…”
DMK Protest - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இன்றைய போராட்டம் பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எழுச்சியுடன் பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் வைகோ, “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் லட்சக்கணக்கானோர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராகவும் தேசிய மக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராவகும் மாபெரும் பேரணியை நடத்தியுள்ளோம்.
லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட போதும், மிக அமைதியான முறையில் அறவழியில் எதிர்ப்பினைத் தெரிவித்தோம். இன்றைக்குத் தமிழகத்தில் நடந்த போராட்டம் மத்திய சர்க்காரை குலை நடுங்க வைத்திருக்கும்…” என்று முழு வீச்சில் பேசிய வைகோவை இடைமறித்த ஒரு நிருபர்,
“மாணவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி போராட்டத்தில் களமிறக்கி விடுவதாக எச்.ராஜா சொல்லியிருப்பது பற்றி…,” என்று ஆரம்பித்தார் நிருபர். உடனே வைகோ, “நல்ல பதிலெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் ஏன் இப்படி,” என்று ஆவேசப்பட்டார்.
இன்றைய பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ப.சிதம்பரம், வீரமணி, கனிமொழி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் தொடரும். சென்னையில் நடைபெற்றது 'பேரணி அல்ல: போர் அணி'. சென்னையில் நடந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி” என்று பேசினார்.