This Article is From Nov 23, 2019

‘விமான நிலையத்தில் தமிழ்’- கர்ஜித்த வைகோ… ஏற்றுக் கொண்ட சபாநாயகர்… ராஜ்யசபா சுவாரஸ்யம்!

Vaiko News - "நான் சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் சென்றபோது, அங்குள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கொடுக்கப்படுகின்றன"

Advertisement
இந்தியா Written by

Vaiko News - இனி எந்த மாநிலத்திலிருந்து ஒரு விமானம் புறப்படுகிறதோ அந்த மாநிலத்தின் மொழியிலும் அறிவிப்புகள் கொடுக்கப்பட வேண்டும்

Vaiko News - இந்திய அளவில் இருக்கும் விமான நிலையங்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன என்றும் பிராந்திய மொழிகளிலும் அறிவிப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா (Rajya Sabha) உறுப்பினருமான வைகோ (Vaiko), மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு அவையிலிருந்த மற்ற உறுப்பினர்களும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவை சபாநாயர் வெங்கையா நாயுடு, வைகோவின் கோரிக்கையை செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து இன்று வைகோ உரையாற்றியபோது, “தமிழகத்தில் இருந்து பல இளைஞர்கள் அரபு நாடுகளில் வேலைக்குச் செல்வதற்காக விமானத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி எளிய மக்கள் பயன்படுத்தும்படி விமான சேவை மாறினாலும், அங்கு செய்யப்படும் அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளன. இதனால், நடுத்தர மற்றும் சாதாரண மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில்தான் இப்படி இருக்கிறது என்றால், மாநிலங்களுக்கு உள்ளேயே அல்லது நாட்டுக்கு உள்ளேயே செல்லும் விமானங்களிலும் இரு மொழி அறிவிப்புதான் கொடுக்கப்படுகிறது. அவசர கால அறிவிப்புகள் கூட இந்த இரு மொழிகளில் மட்டுமே சொல்லப்படுகின்றன.

நான் சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் சென்றபோது, அங்குள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படியொரு நிலை இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

Advertisement

இனி எந்த மாநிலத்திலிருந்து ஒரு விமானம் புறப்படுகிறதோ அந்த மாநிலத்தின் மொழியிலும் அறிவிப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல, மாநிலத்துக்கு உள்ளேயே செல்லும் விமானங்களில், அந்த மாநிலத்தின் மொழியே, பிரதான அறிவிப்பு மொழியாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

இதற்கு துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு, “வைகோ, சொல்வது மிக முக்கியமான கோரிக்கையாகும். இதை மற்ற உறுப்பினர்களும் ஏற்கிறீர்களா?,” எனக் கேட்டார். அதற்குப் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவிக்கவே, மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா, வலியுறுத்தினார். 

Advertisement
Advertisement