Vaiko in Parliament - 'ஆனால், இன்றோ நாம் 1 நிமிடத்திற்கும் 2 நிமிடத்திற்கும் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது'
Vaiko in Parliament - மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ (Vaiko), நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து அழுத்தமாக பேசியுள்ளார். தன் உரையின் போது திருக்குறள் (Thirukkural) ஒன்றையும் மேற்கோள் காட்டி அவர் பேசியது, மற்ற உறுப்பினர்களை ஆர்ப்பரிக்கச் செய்தது.
வைகோ, உரையாற்றும்போது, “பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது, என்ற திருக்குற்ளின் மூலம், தமிழின் மிகப் பெரும் கவி திருவள்ளுவர், நன்றியுணர்தான் ஒரு மனிதன் பெற்றிருக்கக் கூடிய மிகச் சிறந்த குணமாகும் என்கிறார். இந்நேரத்தில் என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் மாநிலங்களவைக்கு இளைஞனாக வந்தபோது எனக்கு அனுபவம் இருக்கவில்லை. அப்போது, அனுபவம் வாய்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னைப் போன்ற இளைஞர்கள் பேசுவதை ஊக்குவித்தனர். இரவு 10 மணியைத் தாண்டினாலும் அவர்கள் அமர்ந்து பொறுமையாக அனைவரின் கருத்துகளையும் கேட்டனர். ஆனால், இன்றோ நாம் 1 நிமிடத்திற்கும் 2 நிமிடத்திற்கும் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது.
கடமை என்பது எவ்வளவு பெரியது என்று நமது முன்னோர்கள் உணர்த்திச் சென்றாலும் அதை இன்று பெரும்பாலானோர் சரியாக கடைபிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்கு உரியது. ராஜ்யசபாவிற்கு நிதி சார்ந்த மசோதாக்களில் தாக்கம் ஏற்படுத்த அதிகாரம் கிடையாது. ஆனால், இங்கிருந்துதான் நாட்டின் தலை சிறந்த நிதி அமைச்சர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
ராஜ்யசபாவில் அதிகாரங்களை குறைக்கவும், முற்றிலுமாக நீக்கவும் இந்திய வரலாற்றில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தையும் தாண்டி ராஜ்யசபா இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை ஜனநாயகம் என்பது நம் அமைப்புகளைக் காப்பதிலும் அனைவரின் கருத்துகளையும் கேட்பதிலும்தான் இருக்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறேன். அனைத்து மாநிலங்களுக்கும் சரிவிதிக பிரதிநிதித்துவம் இருந்தால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கும்,” என முடித்தார்.
இதைக் கேட்ட மற்ற மாநிலங்களை உறுப்பினர்களும், கரகோஷம் எழுப்பி வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.