மதிமுக சார்பில் வைகோ, திமுக-வின் ஆதரவுடன் ராஜ்யசபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவரா என்று சொல்லப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. அதே நேரத்தில் நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
2009 ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா, ஒரே நாடாக இருக்காது” என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்நதது திமுக-வினர்தான். அப்போது மதிமுக - திமுக எதிரெதிர் முகாமில் இருந்தன. ஆனால் தற்போது மதிமுக சார்பில் வைகோ, திமுக-வின் ஆதரவுடன் ராஜ்யசபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
இதற்கு முன்னர் வைகோ, திமுக சார்பில் ராஜ்யசபாவிற்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1999 முதல் 2004 வரை அவர் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று லோக்சபா உறுப்பினராக இருந்தார். தற்போது மீண்டும் ராஜ்யசபா எம்.பி-யானால், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகோ, நாடாளுமன்றப் படிகளில் ஏறுவார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக போடா சட்டத்திற்குக் கீழ் வைகோ கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. போடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ, சுமார் ஓராண்டு சிறையில் இருந்தார். 2014 ஆம் ஆண்டு அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.