Vaiko Speaks in Parliament - “இந்தியாவில் நிலவும் காற்று மாசுவினால் 3 நிமிடத்திற்கு 1 குழந்தை மரணிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன"
Vaiko Speaks in Parliament - நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர், வைகோ (Vaiko), சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும் சீமைக்கருவேல மரம் குறித்தும் பேசிய பேச்சு கவனம் பெற்றுள்ளது. வைகோ பேசும்போது மிகுந்த அமைதியுடன் அவரது உரையை மற்றவர்கள் கேட்டனர்.
“டெல்லியில் காற்று மாசு, நீர் மாசு குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு மாசுவும் மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது. அதுதான் சத்த மாசு. இந்த அவையிலும் அதை நாம் இன்று பார்த்தோம்,” என்று கேலியாக உரையை ஆரம்பித்த வைகோ,
தொடர்ந்து, “இந்தியாவில் நிலவும் காற்று மாசுவினால் 3 நிமிடத்திற்கு 1 குழந்தை மரணிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. வட இந்திய விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரிப்பதனால்தான் இந்த மாசு அதிகமாகியுள்ளது என்று ஊடகங்கள் தொடர்ந்து செய்தி பரப்பி வருகின்றன.
ஆனால், இதற்குப் பல்வேறு காரணம் இருப்பதை ஆட்சியில் இருக்கும் அரசும், அதிகாரிகளும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அனைத்திற்கும் விவசாயிகளையே குற்றம் சாட்டுகின்றனர். ஆட்சியில் இருக்கும் அரசு, முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்தித் தப்பித்து விடுகிறது. முறையான தீர்வு என்ன என்பது குறித்து யோசிப்பதில்லை…
தமிழகத்தில் ஒரு பெரும் அச்சுறுத்தல் கொண்ட மாசு இருக்கிறது. அதுதான் சீமைக்கருவேல மரம். இந்த மரமானது என்ன வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பச்சைப் பசேல் என்றுதான் இருக்கும். அதைப் பார்த்து, தமிழகம் மிகவும் பசுமையானது என்று தப்புக் கணக்குப் போட முடியாது.
காரணம், இந்த மரமானது, பூமிக்கு அடியில் 100 அடி வரை வேர் விட்டு, அனைத்து நீரையும் உறிஞ்சுவிடும். அதன் இலைகள், காற்றில் இருக்கும் பிராண வாயுவை உரிஞ்சு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடும். முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு பாதிப்புத் தரும் இந்த சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்தில் மட்டும் அல்லாமல், ஆந்திராவிலும் வேர் விடத் தொடங்கியுள்ளன. அது தொடர்ந்து வட இந்தியா நோக்கி வருகிறது. அதை அகற்ற அனைவரும் முன்வந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுவிற்கும் சீக்கிரம் விடை காண வேண்டும். விவசாயிகள் மீது பழி போடுவது சரியன்று,” என தீர்க்கமாக உரையாற்றினார்.