This Article is From Dec 24, 2018

‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு…!’- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசை சாடும் வைகோ

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிகத் தடையை மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது

‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு…!’- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசை சாடும் வைகோ

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிகத் தடையை மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ள, இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.

வைகோ ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு குறித்து அறிக்கை மூலம் தெரிவிக்கையில், ‘தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு ஸடெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டதை உரிய ஆதாரங்களோடு பக்கம் பக்கமாக என்னால் பட்டியலிட முடியும்.

இப்பொழுதும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குதவற்கு மிகத் தந்திரமாக தமிழக அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயல்கிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிசம்பர் 21 ஆம் தேதி, இடைக் காலத் தடை ஆணைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தைத் தற்போது அணுகக்கூடாது; கேவியட் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினால் அப்பொழுது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லலாம்.

தமிழக அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். அத்துடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தானும் வழக்குத் தொடுக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “முயலோடும் சேர்ந்து ஓடுவது; அதே வேளையில் வேட்டை நாயுடன் சேர்ந்து விரட்டுவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது”. இந்த மோசடி நாடகத்தில்தான் தமிழக அரசு ஸடெர்லைட் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு ஆணைப் பிறப்பித்திருந்தது. இந்த ஆணைக்கு எதிராக வேதாந்தா, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் வேதாந்தாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ‘3 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலைத் திறக்கப்பட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஜனவரி 21 ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - "3 மாதங்கள் கழித்து கூடும் தமிழக அமைச்சரவை… பரபரக்கும் அரசியல் களம்!"

.