This Article is From Jul 26, 2019

“ஐ வார்ன் யூ டுடே!”- மத்திய அரசை ராஜ்யசபாவில் எச்சரித்த வைகோ; கடுகடுத்த துணை ஜனாதிபதி!

ஒரு கட்டத்தில் வைகோ, இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க, சபாநாயகரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறுக்கிட்டார்

Advertisement
தமிழ்நாடு Written by

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ராஜ்யசபாவில் கொதித்தெழுந்து பேசியுள்ளார் வைகோ

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ராஜ்யசபாவில் கொதித்தெழுந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் வைகோ, இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க, சபாநாயகரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, “இந்த சபையில் யாரும் எச்சரிக்கை கொடுக்க முடியாது” என்று உஷ்ணமானார். 

மாநிலங்களவையில் பேசிய வைகோ, “இந்திய அரசுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருப்பதிலேயே மிகவும் நாசகார, அழிவுத் திட்டமான ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தமிழக காவேரி டெல்டா பகுதியில் திணிக்க இந்த அரசு முயல்கிறது. இந்தத் திட்டம் மூலம் மீத்தேன் மற்றும் ஷேல் வாயுக்களை எடுக்க முடியும் என்று அரசு சொல்கிறது. நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள தற்போதைய மத்திய அரசு, விளை நிலங்களில் 10,000 அடி தோண்டி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் என்று துடிக்கிறது. இது தமிழக விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த 17 ஆம் தேதி அளித்த பேட்டியில், ‘எப்படியானாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல் செய்தே தீருவோம்' என்று ஆணவப் போக்கில் கூறுகிறார். இந்தத் திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் சாதி, மதம், பாலினம் கடந்து பலர் அமைதியான முறையில் கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை அமல் செய்தால், மத்திய அரசு கண்டிப்பாக வளம் பெறும். பல கோடி ரூபாய் வருவாய் வரும். 

Advertisement

ஆனால், காவேரி டெல்டாவின் பெரும்பான்மை பகுதி பாலைவனமாக மாறும். தமிழகம் இன்னொரு எத்யோப்பியாவாக மாறும். அங்கிருக்கும் எனது மக்கள் பாத்திரம் ஏந்தி பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே இந்தத் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். அப்படியில்லை என்றால், தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் செய்வார்கள். அது எதிர்பாராத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்று நான் எச்சரிக்கிறேன்” என்று முழு மூச்சில் பேசி முடித்தார். 

வைகோ பேசும்போதே, சில ஆளுங்கட்சி எம்.பி-க்கள் கோஷம் எழுப்பினார்கள். வைகோ பேசி முடித்தவுடன், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு, “யாரும் அவையில் எச்சரிக்கை கொடுக்க முடியாது. இன்னொன்று, வைகோ நீங்கள் மிக வேகமாக பேசிவிட்டீர்கள். எப்போதும் சுருக்கமாக தெளிவாக பேசவும்” என்று கூறினார். 

Advertisement


 

Advertisement